ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-6. ஒரு துக்கமான சம்பவம்

     உயர்தரப் பள்ளியில் பல சமயங்களிலும் எனக்கு இருந்த நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களில் இருவர் நெருங்கிய நண்பர்கள் எனலாம். அவர்களில் ஒருவருடைய நட்பு வெகு காலம் நீடிக்கவில்லை. அவரை நான் கைவிடவில்லை. மற்றவர்களுடன் நான் நட்புக் கொண்டிருந்ததற்காக அவர் தான் என்னக் கைவிட்டு விட்டார். பின்னால் ஏற்பட்ட இந்த நட்பை, என் வாழ்க்கையில் நேர்ந்த ஒரு துக்கமான சம்பவமாகவே நான் கருதுகிறேன். இந்நட்பு நீண்ட காலம் நீடித்தது. சீர்திருத்த வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்புக் கொண்டேன்.

     இந்த நண்பர், முதலில் என் அண்ணனின் நண்பர். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அவரிடமிருந்த குறைபாடுகளை நான் அறிவேன். ஆயினும், விசுவாசமுள்ள நண்பர் என்று அவரைக் கருதினேன். எனக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கிறது என்று என் தாயார், என் மூத்த அண்ணன், என் மனைவி முதலியவர்கள் எல்லோரும் எனக்கு எச்சரிக்கை செய்தார்கள். என் மனைவியின் எச்சரிக்கையை நான் மதிக்கவில்லை. ஆனால், என் தாயார், மூத்த அண்ணன் ஆகியோருடைய கருத்துக்கு விரோதமாக நான் நடக்கத் துணியவில்லை. ஆகவே, அவர்களுக்குப் பின் வருமாறு சமாதானம் கூறினேன்: "நீங்கள் கூறும் குறைகளெல்லாம் அவரிடம் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் அவரிடம் இருக்கும் நற்குணங்கள் உங்களுக்குத் தெரியா. அவரைத் திருத்திவிட வேண்டும் என்பதற்காகவே, நான் அவருடன் பழகுவதால் அவர் என்னைக் கெடுத்துவிட முடியாது. அவர் தம்முடைய வழிகளை மாத்திரம் திருத்திக் கொண்டு விட்டால் மிகச் சிறந்தவராகி விடுவார் என்பது நிச்சயம். ஆகையால், எனக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்."

     நான் இவ்விதம் கூறியது அவர்களுக்குத் திருப்தியளித்திருக்கும் என்று நான் எண்ணவில்லை என்றாலும், அவர்கள் என் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு என் வழியே போக என்னை அனுமதித்து விட்டார்கள்.

     நான் அப்பொழுது எண்ணியதெல்லாம் தவறு என்பதைப் பிறகு கண்டேன். சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்தக் கொள்ளலாகாது. ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு. ஆனால், அத்தகைய நட்பை இவ்வுலகில் காண்பது அரிது. ஒரே வித சுபாவமுள்ளவர்களிடையே ஏற்படும் நட்பே முற்றும் சிறந்ததாகவும் நீடித்ததாகவும் இருக்கும். நண்பர்களில் ஒருவர் குணம் இன்னொருவருக்குப் படிகிறது. ஆகவே நட்பினால் சீர்திருத்துவது என்பதற்கு அதிக இடமே இல்லை. தனிப்பட்டு அன்னியோன்யமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம். ஏனெனில், மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன. கடவுளோடு தோழமை கொள்ள விரும்புவோர் தனியே விலகி இருக்க வேண்டும்; அல்லது உலகம் முழுவதையுமே தமது நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். நான் கூறுவது தவறாக இருக்கலாம். என்றாலும், ஒரு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள நான் செய்த முயற்சியில் தோல்வியே ஏற்பட்டது.

     ராஜ்கோட் முழுவதிலும் சீர்திருத்தம் என்ற அலையின் வேகம் மிகுந்திருந்த சமயத்திலேயே இந்த நண்பரை முதன் முதலில் நான் சந்தித்தேன். எங்கள் ஆசிரியர்களில் பலர் ரகசியமாக மதுவும், மாமிசமும் சாப்பிடுகிறார்கள் என்று இந்த நண்பர் என்னிடம் கூறினார். ராஜ்கோட்டில் இருக்கும் பல பிரமுகர்களின் பெயர்களை சொல்லி அவர்களும் இந்த ரகத்தில் சேர்ந்தவர்களே என்றார். உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிலரும் இப்படிச் செய்கிறார்கள் என்றார்.

     இதைக்கேட்டு நான் ஆச்சரியமும் மனவேதனையும் அடைந்தேன். அவர்கள் இவ்விதமானதற்குக் காரணம் என்ன என்று நான் கேட்டதற்குப் பின்வருமாறு அவர் சொன்னார்: "புலால் உண்ணாததால் நாம் பலமில்லாதவர்களாக இருக்கிறோம். புலால் உண்பவர்களாக இருப்பதனாலேயே ஆங்கிலேயரால் நம்மை ஆளமுடிகிறது. நான் எவ்வளவு திடகாத்திரத்துடன் இருக்கிறேன் என்பதை நீயே பார்க்கிறாய். ஓட்டப் பந்தயத்தில் நான் வல்லவன் என்பதும் உனக்குத் தெரியும். இதற்குக் காரணம் நான் புலால் உண்பதுதான். மாமிசம் உண்போருக்குக் கட்டிச் சிரங்குகள், கொப்பளங்கள் முதலியன வருவதில்லை. எப்பொழுதாவது அவர்களுக்கு வந்து விட்டாலும் சீக்கிரத்தில் குணமாகி விடுகின்றன. புலால் உண்ணும் நமது உபாத்தியாயர்களும் மற்ற முக்கியஸ்தர்களும் முட்டாள்கள் அல்ல. அதிலிருக்கும் நன்மை அவர்களுக்குத் தெரியும். நீயும் அவர்களைப் போல் சாப்பிட வேண்டும். சோதனை செய்து பார்ப்பதைப் போல நல்லது எதுவும் இல்லை. சாப்பிட்டு அது எவ்வளவு பலத்தைக்கொடுக்கிறது என்று பார்."

புலால் உண்பதை வற்புறுத்திச் சொல்லப்பட்ட இவை யாவும் ஒரே சமயத்தில் கூறப்பட்டவை அல்ல. என் மனத்தில் படும்படி செய்வதற்காக என் நண்பர் பல சமயங்களில் நீண்ட விரிவான வாதம் புரிந்திருக்கிறார். அதன் சாரமே இது. என மூத்த சகோதரர் இதற்கு முன்னாலேயே அந்தப் படுகுழியில் விழுந்து விட்டார். ஆகையால் நண்பரின் வாதங்களை அவரும் ஆதரித்துப் பேசினார். என் அண்ணனோடும், இந்த நண்பரோடும் ஒப்பிடும் போது, நான் நிச்சயமாக நோஞ்சலாகவே இருந்தேன். அவர்கள் இருவரும் திடகாத்திரம் உடையவர்கள்; பலசாலிகள்; அதிக தைரியசாலிகள். இந்த நண்பரின் பராக்கிரமச் செயல்களைக் கண்டு மயங்கி விட்டேன். அவர் நீண்ட தூரம் ஓடுவார். உயரத்திலும், நீளத்திலும் தாவிக் குதிப்பதில் சமர்த்தர். எவ்வளவு அடி கொடுத்தாலும் சரி, தாங்கிக் கொள்ளுவார். இந்தப் பராக்கிரமச் செயல்களை யெல்லாம் அவர் என்னிடம் செய்து காட்டுவார். தமக்கு இல்லாத திறமையைப் பிறரிடம் காணும்போது யாரும் பிரமித்து விடுவது இயல்பு. அதே போல நண்பரின் பராக்கிரமச் செயல்களைப் பார்த்த நானும் பிரமித்துப் போனேன். அவரைப் போல் நானும் இருக்க வேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. என்னால் தாண்டவோ, ஓடவோ முடியாது. அவரைப் போன்றே நானும் ஏன் பலமுள்ளவனாக இருக்கக் கூடாது?

     மேலும், அப்பொழுது நான் ஒரு கோழையாகவும் இருந்தேன். திருடர்கள் பயமும், பிசாசுகள், பாம்புகள் ஆகியவற்றின் பயமும் எனக்கு இருந்தன. இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். இருட்டு என்றாலே எனக்கு பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும், மற்றொரு பக்கத்திலிருந்து திருடர்களும், வேறொரு பக்கத்திலிருந்து பாம்புகளும் வருவது போலக் கற்பனை செய்து கொண்டிருக்கும் காரணத்தால், இருட்டில் தூங்குவதென்பது என்னால் முடியாத காரியம். எனவே, அறையில் விளக்கு இல்லாமல் என்னால் தூங்க முடியாது. என் மனைவி அப்பொழுது குழந்தையல்ல; வாலிபப் பருவத்தையடையும் தறுவாயில் இருந்தாள். அவள் என் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பாள். எனக்கு இருந்த பயங்களையெல்லாம் அவளிடம் எப்படிச் சொல்லுவது ? என்னை விட அவள் தைரியசாலி என்பதை நான் அறிவேன். இதனால் என்னைக் குறித்து நானே வெட்கப் படுவேன். பாம்பு, பிசாசு என்ற பயம் அவளுக்கு இல்லை. இருட்டில் எங்கே வேண்டுமானாலும் போவாள். என்னிடமிருந்த இந்தப் பலவீனங்களை எல்லாம் என் நண்பர் அறிவார். உயிரோடு பாம்பைத் தம் கையில் பிடிக்க முடியும் என்றும், திருடர்களை எதிர்த்து விரட்டத் தம்மால் முடியும் என்றும், பிசாசுகள் உண்டு என்றே தாம் நம்புவதில்லை என்றும் அவர் என்னிடம் கூறுவார். இவ்வளவும் புலால் உண்பதன் பலன்கள் என்பார்.

     குஜராத்திக் கவியான நர்மத்தின் சிந்துப் பாடல் ஒன்றைப் பள்ளிச் சிறுவர்கள் பாடுவார்கள். அது பின் வருமாறு,

     பிரம்மாண்டமான ஆங்கிலேயனைப் பார்,
     சின்னஞ் சிறிய இந்தியனை அவன் ஆளுகிறான்.
     காரணம் - புலால் உண்பதால்
     அவன் ஐந்து முழ உயரம் இருப்பதே.

இவையெல்லாம் தமக்குரிய விளைவை என்னிடம் உண்டு பண்ணி விட்டன. நான் தோற்றுப் போனேன். புலால் உணவு நல்லது; அது என்னைப் பலமுள்ளவனாகவும் தைரியசாலியாகவும் மாற்றும்; நாடு முழுவதுமே புலால் உணவு கொள்ள ஆரம்பித்து விட்டால் ஆங்கிலேயரை வென்று விடலாம் என்ற எண்ணங்கள் என்னுள் வளர்ந்தன.

     அதன்பேரில் பரிசோதனையைத் தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது. அது ரகசியமாக நடைபெற வேண்டும். காந்தி சமூகத்தினர் வைஷ்ணவர்கள். முக்கியமாக என் பெற்றோர்கள் தீவிர வைஷ்ணவர்கள். நாள் தவறாமல் அவர்கள் விஷ்ணு கோயிலுக்குப் போவார்கள். குடும்பத்திற்கு என்றே சொந்தமான கோயில்களும் உண்டு. ஜைன சமயம் குஜராத்தில் பலமாக பரவி இருந்தது. அதன் செல்வாக்கு எங்கும், எல்லா சமயங்களிலும் உணரப்பட்டது. குஜராத்தில் ஜைனர்களிடத்திலும், வைஷ்ணவர்களிடத்திலும் புலால் உணவுக்கு இருந்த அவ்வளவு பலமான எதிர்ப்பையும், அதன் மீது இருந்த கடுமையான வெறுப்பையும் போல் இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ காண முடியாது. இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன் நான். அதோடு என் பெற்றோரிடம் எனக்கு மிகுந்த பக்தியும் உண்டு. நான் புலால் உண்டேன் என்பதை அறிந்த கணத்திலேயே அவர்கள் அதிர்ச்சியினால் செத்து விடுவார்கள் என்பதையும் அறிவேன். மேலும் சத்தியத்தில் நான் கொண்டிருந்த பற்று, என்னை அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் செய்தது. மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுவேனாயின், என் பெற்றோரை நான் ஏமாற்ற வேண்டியிருக்கும் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் என் புத்தியெல்லாம் சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ருசிக்கு சாப்பிவது என்பதே அதில் இல்லை. அதற்கு தனிப்பட்ட ருசி இருப்பதாக எனக்குத் தெரியாது. பலசாலியாகவும் தைரியசாலியாகவும் ஆகவேண்டும் என்று விரும்பினேன். ஆங்கிலேயரை தோற்கடித்து இந்தியா சுதந்திரமடையும்படி செய்வதற்கு என் நாட்டினரும் அப்படி ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டேன். சுயராஜ்யம் என்ற சொல்லை அதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் சுதந்திரம் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். சீர்திருத்தத்தில் இருந்த உற்சாகம் என்னைக் குருடனாக்கி விட்டது. ரகசியமாகவே இருக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிடவே, இக்காரியத்தை என் பெற்றோருக்குத் தெரியாதபடி மறைத்து வைப்பது சத்தியத்தினின்று தவறியதாகாது என்றும் என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin