தேச பிதா என்று நாம் போற்றி வணங்கும் மகாத்மா காந்திஜிக்கு ராமனிடமிருந்த ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. காந்திஜிக்கும் ராம நாமத்திற்கும் உள்ள தொடர்பை இங்கு சற்று விரிவாகக் காண்போம்.
ஷோலாப்பூர் - புனா மார்க்கத்தில் உள்ள உருளிகாஞ்சன் என்ற கிராமத்தில் ராம நாமத்தின் சக்தியைப் பற்றி அந்தக் கிராம மக்களுக்கு காந்திஜி விரிவாக எடுத்துரைத்தார். அற்புதமான அந்த பிரசங்கங்களில் அவருக்கு ராமனின் மீது இருந்த அசாத்திய பக்தியும், அதன் சக்தியாலேயே அவர் அனைத்துக் காரியங்களையும் செய்து வருவதையும் அவர் பிரகடனப்படுத்தினார்.
ராம நாமம்தான் தன் லட்சியம் என்று பிரகடனப்படுத்திய காந்திஜி அதைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறார்:
“உள்ளத்தில் ராம நாமம் இடம் பெற்று விடுமாயின், அதன் முன்னிலையில் பிரம்மச்சரியத்தை அனுசரிப்பதற்கான சாஸ்திரிய முறைகள் யாவும் அற்பமாகி விடும். அப்போதுதான் ராம நாமத்தின் மகோன்னதமான அழகையும் சக்தியையும் நாம் உணர முடியும். இணையற்ற, குறி தவறாத இந்த ஆயுதத்தை அயராது தேடும் முயற்சியில் இலட்சியத்திற்கும் அதை அடைவதற்குமான முறைகளுக்கும் எவ்வித வேற்றுமையும் காண்பது கஷ்டமான காரியமாகும்” - (ஹரிஜன் -22-6-1947)
பம்பாயில் ருங்டா ஹவுஸில் குழுமியிருந்த கூட்டத்தினரிடம் அவர் கூறியது:
“இயற்கை வைத்தியத்தில் ராம நாமமே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். யாரும் இது பற்றி ஆச்சரியப்படவேண்டாம்... இந்தியா இந்தக் கொள்கையின் சக்தியை உணருமானால், நாம் சுதந்திரம் அடைவது மட்டுமல்ல, ஆரோக்கியமான நபர்களைக் கொண்டுள்ள - வியாதிகளும் நோய்களும் இன்று கொண்டுள்ளதைப் போல் அல்லாத - நாடாகவும் ஆகி விடுவோம்"
(In the armoury of nature curist, Ramanama is the most potent weapon. Let no one wonder at it.. .. If India could realize the power of that principle, not only would we be free but we would be a land of healthy individuals, too - not the land of epidemics and ill-health that we are today.)
காந்திஜியின் தந்தையின் முன்னால் தினம்தோறும் ராமாயண வாசிப்பு நடப்பது வழக்கம். போர்பந்தரில் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். ஒவ்வொரு நாள் மாலையும் ராமாயணம் படிப்பதை அவர் கேட்பது வழக்கம். பிலேஸ்வத்தைச் சேர்ந்த லதா மஹராஜ் ராமாயணத்தை வாசித்து வந்தார்.
லதா மஹராஜைப் பற்றியே ஒரு குறிப்பிடத் தகுந்த சம்பவம் உண்டு. தொழுநோயால் அவர் பீடிக்கப்பட்டிருந்தார். ஆனால் எந்த விதமான மருந்தையும் உட்கொள்ளவில்லை! பிலேஸ்வர் ஆலயத்தில் மஹாதேவனின் விக்ரஹத்திற்கு அர்ச்சிக்கப்பட்ட வில்வ இலைகளை தொழு நோய் வந்திருந்த இடங்களில் போட்டதோடு, ராம நாமத்தை இடைவிடாமல் ஜெபித்தார். நோய் நீங்கி விட்டது! அவரது நம்பிக்கையே அவரை பூரணமானவராக ஆக்கியதாகக் கூறப்பட்டது.
காந்திஜி கூறுகிறார். “ இது உண்மையாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நாங்கள் அதை நம்பினோம்.”
ராமாயணத்தை அவர் வாசிக்க ஆரம்பித்த போது அவர் உடலில் தொழுநோயே இல்லை. இனிமையான குரலைக் கொண்டவர் அவர். இரண்டடிகளையும் (தோஹா) நான்கடிகளையும் அவர் பாடி அதற்கு அர்த்தத்தையும் விளக்குவார். உபந்யாசத்தில் தான் மெய்மறப்பதோடு கேட்பவர்களையும் மெய்மறக்கச் செய்வார்.
காந்திஜி கூறுகிறார்: “எனக்கு அப்போது 13 வயதிருக்கும். அவரது வாசிப்பில் கவர்ந்து இழுக்கப்பட்டது எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. அதுதான் எனக்கு ராமாயணத்தில் ஆழ்ந்த பக்தியை உருவாக்க அஸ்திவாரமாக இருந்தது. இன்று, துளஸிதாஸரின் ராமாயணத்தை எல்லா பக்தி இலக்கியத்திலும் அதி உன்னதமான நூலாகக் கருதுகிறேன்”
(I must have been thirteen at that time, but I quite remember being enraptured by his reading. That laid the foundation of my deep devotion to the Ramayana. Today, I regard the Ramayana of Tulsidas as the greatest book in all devotional literature.”)
1946ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதியில் வெளி வந்த செய்தி இது:
கொளுத்தும் வெயில் நாட்களில் டெல்லியில் மாலையில் எவ்வளவோ வேலைகளுக்கு இடையேயும் கூட்டத்தில் ஆரோக்கியத்துடன் கலந்து கொள்வது அற்புதம்தான் என்று கூறிய காந்திஜி இதற்குக் காரணம் ராம நாமத்தின் சக்தியே என்றார். மேலும் கூறுகையில், கடவுளின் அருளாலேயே அவர்களுடன் இருக்க முடிந்திருக்கிறது என்றார் அவர்.
ஒரு முறை காந்திஜி பயணம் செய்த இரயிலின் தண்டவாளத்தில் யாரோ சிலர் ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டிருந்தனர். எஞ்சின் டிரைவர் சமயோசிதமாக வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யார் தன்னைக் கொல்ல விரும்புகிறார்கள் என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறிய காந்திஜி ஏழாவது முறையாக இப்படி மயிரிழையில் உயிர் பிழைத்ததாக குறிப்பிட்டார். ஒருவேளை 125 வருடம் வாழ்ந்து சேவை செய்ய கடவுள் சித்தம் செய்திருக்கிறாரோ என்றும் அவர் கூறினார். (ஆனால் பின்னர் காந்திஜியே 8-6-47 ஹரிஜன் இதழில் 'இன்று உருவாகி வரும் இந்தியாவில் எனக்கு இடமில்லை. 125 வயது வரையில் வாழும் நம்பிக்கையை நான் கை விட்டு விட்டேன்' என்று மன வருத்தத்துடன் குறிப்பிட்டார்.)
ஆக, இப்படி ஒவ்வ்வொரு சிறு நிகழ்ச்சியிலும் ராமனே தன்னை வழி நடத்துவதை பல முறை காந்திஜி குறிப்பிட்டிருக்கிறார்.
(ஆக்கம்- ச.நாகராஜன் )
(நன்றி : ஆதிபிரான்)
(நன்றி : ஆதிபிரான்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.