வியாழன், 6 மே, 2010

நலம் தருவாள் மீனாட்சி


















"பொதிகை மலைச் சாரலிலே

பூத்து வந்த தென்றலிலே

அல்லி மலர் தண்டெனவே

நடந்துவரும் மீனாட்சி!

கிள்ளை மொழிப் பைந்தொடியாய்

கிண்கிணியென சிரிப்புடனே

கீழ்வானச் செஞ்சுடராய்

திகழும் அழகு மீனாட்சி!

பச்சை நிறச் சாயலிலே

பைந்தமிழின் இனிமையென

பாசமதைப் பொழிந்து தரும்

பால் நிலவே மீனாட்சி!

பொய்கை வளர் மீன்களென

கெண்டை விழி ஓரங்களில்

மைதீட்டிய மலர்க்கொடியே

மங்கையவள் மீனாட்சி!

வைகை நதி நீராடி

வையமெல்லாம் மகிழ்ந்திடவே

வான் முகிலாம் கூந்தலிலே

மலர் சூடிய மீனாட்சி!

மான் மழுவைக் கையேந்தும்

மதியதனைச் சிரம் கொண்ட

மன்னவனாம் சுந்தரேசன்

பாகமமர் மீனாட்சி!

பாற்கடலில் அலைமேலே

பைந்நாகப் பாயினிலே

படுத்துறங்கும் கண்ணனவன்

குலக்கொடியே மீனாட்சி!

செல்லக்கிளி தோளிலே

சிரித்து வரும் வேளையிலே

நல்லதொரு வாக்கு தந்து

நலம் தருவாள் மீனாட்சி!'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin